பருத்தி நூற்பானது, பருத்தி இழைகளை முறுக்கேற்றுவதன் மூலமாக ஆடைகள் மற்றும் இதர துணிநூல் நுகர்வோர் பயன்பாட்டுக்கான தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளான நூலினைத் தயாரிக்கும் செய்முறையாகும். இந்நூற்புப் பிரிவானது துணிநூல் தொழிலில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி ஆகும். பருத்தி நூற்பு தொழில்நுட்பத்தில் ரிங் நூற்பு, (Ring Spinning) ரோட்டர் நூற்பு (Rotor Spinning), காம்பேக்ட் நூற்பு (Compact Spinning), ஏர் ஜெட் நூற்பு (Airjet Spinning) ஆகிய வகைகள் உள்ளன.
2019 ஆம் ஆண்டில் உலக அளவில் 223 மில்லியன் ரிங் நூற்புக் கதிர்களும், 7.4 மில்லியன் ரோட்டர் நூற்பு சுழலிகளும் நிறுவப்பட்டுள்ளன.
இந்திய நூற்புத் தொழில் 52.48 மில்லியன் நூற்புக் கதிர்களுடன், நூற்புத் தொழிலில் உலகின் மிகப்பெரிய நாடுகளுள் ஒன்றாக விளங்குகிறது.
நாட்டில் நிறுவப்பட்டுள்ள (Rotors) ரோட்டர்களின் எண்ணிக்கை 8 இலட்சமாகும். நூற்புக்கதிர் திறனில், சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா அதிகத் திறன் கொண்ட இரண்டாவது நாடாக விளங்குவதோடு, உலகப் பருத்தி நூல் வணிகத்தில் 25% அளவிற்கு தனது பங்களிப்பினைக் கொண்டுள்ளது.
பருத்தி இழையானது, துணிநூல் தொழிலில் மிகவும் விரும்பப்படும் இழையாகத் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. இந்திய துணித்தொழில் ஏற்றுமதியில் பருத்தி ஜவுளி 60% க்கும் அதிகமாக தனது பங்களிப்பினை அளிக்கிறது.
நூல் உற்பத்தி மற்றும் கதிர்களின் எண்ணிக்கை ஆகிய இரு இனங்களிலும் தமிழ்நாடு முதன்மை வகிக்கிறது. இந்தியாவில் உள்ள 3367 நூற்பாலைகளில், தமிழ்நாட்டில் ஆறு கூட்டுறவு நூற்பாலைகள் உட்பட 1861 நூற்பாலைகள் அமைந்துள்ளன. நாட்டின் ஒட்டு மொத்த நூற்புத் திறனில் 46% தமிழ்நாட்டில் உள்ளது.
இந்தியாவில் உள்ள 52.48 மில்லியன் கதிர்களில் 22.79 மில்லியன் கதிர்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றுள் 1.18 இலட்சம் கதிர்களுடன் இயங்கி வரும் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளும் அடங்கும். இதன் மூலம் 2.80 இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இருப்பினும், மாநிலத்தின் நூல் உற்பத்தித் திறன் இந்தியாவின் இதர அனைத்து பகுதிகளைக் காட்டிலும், 18% முதல் 20% குறைவாக உள்ளது. பழமையான இயந்திரங்களே உற்பத்தி திறன் இழப்புக்குக் காரணமாக உள்ளன.
மாநிலத்தில் இயங்கிவரும் பெரும்பாலான நூற்பாலைகள் நவீன தொழில் நுட்பத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளாமல், பழமையான தொழில்நுட்ப இயந்திரங்களுடன் இயங்கி வருகின்றன. இந்தியாவில் உள்ள 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான நூற்பு இயந்திரங்களில், உத்தேசமாக 68% இயந்திரங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. எனவே, நுாற்புப் பிரிவில் நவீனமயமாக்குதல் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப இயந்திரங்களை நிறுவுதல் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டியது அவசியமாகிறது.
இந்திய நூற்பு பிரிவில், தமிழ்நாட்டின் முதன்மை நிலையினை தக்கவைத்துக் கொள்ளவும், ஏற்றுமதியின் அடித்தளமாய் விளங்கும் தொடர் நிலைப் பிரிவுகளுக்கு தரம் வாய்ந்த நூலினை விநியோகம் செய்யவும், பழைய / காலாவதியான தொழில்நுட்ப இயந்திரங்களுக்கு மாற்றாக நவீனமயமாக்குதலும், தொழில்நுட்ப மேம்பாடும் அவசியமாகிறது. அதற்கேற்ப, தமிழ்நாடு அரசு பழைய இயந்திரங்களை நவீனமயமாக்க நூற்பாலைகளுக்கு வட்டி மானியம் வழங்கி வருகிறது.
பழைய இயந்திரங்களை நவீன மயமாக்குதலின் மூலம் நூல் உற்பத்தித் திறன் மற்றும் நூலின் தரம் அதிகரிக்கும். இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள நூற்பாலைகளின் சந்தையில் போட்டியிடும் வல்லமை கணிசமாக அதிகரிக்கும். உற்பத்தித் திறன் மற்றும் நுால் விற்பனை அதிகரிப்பதன் மூலம் அரசுக்குச் சரக்கு மற்றும் சேவை வரி மூலம் வருவாய் அதிகரித்திடும்.
துணிநூல் மதிப்புச் சங்கிலியில் பருத்தி விதை நீக்கும் பிரிவானது, பருத்தி இழையிலிருந்து விதைகளைப் பிரித்தெடுத்து, பருத்தி விளை பொருளை, பஞ்சு (Lint) எனும் வணிகப் பொருளாக மாற்றிடும் மிக முக்கியப் பணியினை மேற்கொள்ளும் அடிப்படையான செயல்முறை ஆகும். பருத்தி விதை நீக்கும் பிரிவானது பருத்தி விவசாயிக்கும் துணிநூல் தொழிலுக்குமிடையே ஒரு பாலமாகத் திகழ்கிறது.
பருத்தி விதை நீக்கும் ஆலை
பருத்தி இழையின் தரமானது மரபணு நிலை, சாகுபடி சூழ்நிலைகள், பறிக்கும் முறைகள், கிடங்கில் இருப்பு வைக்கப்படும் வழிமுறைகள், போக்குவரத்து நடைமுறைகள், பருத்தி விதை நீக்கும் வழி முறைகள், இயந்திரத்தின் தன்மைகள் மற்றும் சூழ்நிலைகள், பருத்தி விதை நீக்கும் இயந்திர அமைப்பு (Settings / Adjustment), பஞ்சு தூய்மைப்படுத்துதல் மற்றும் பஞ்சுப் பொதி கட்டுதல் ஆகிய காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றது. மேற்கண்ட அனைத்திலும் பருத்தி விதை நீக்கும் செய்முறையே பருத்தியின் தரத்தைப் பராமரிப்பதில் ஒரு முக்கியக் காரணியாக அமைகிறது.
இந்தியாவில் 4000 பருத்தி விதை நீக்கும் ஆலைகள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றுள் 280 பருத்தி விதை நீக்கும் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. இந்தியாவின் பிற பகுதிகளோடு ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் பருத்திச் சாகுபடி குறைவாக உள்ளதால், தமிழ்நாட்டில் பருத்தி விதை நீக்கும் ஆலைகளும் குறைவாக உள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள பருத்தி விதை நீக்கும் ஆலைகளில் பழைய மற்றும் நவீன இயந்திரங்கள் ஆகிய இரண்டுமே பயன்படுத்தப்படுகின்றன. நவீன இயந்திரங்களின் உற்பத்தி திறனானது, பழைய இயந்திரங்களைக் காட்டிலும் 50 விழுக்காடு அதிகமாக உள்ளது. நவீன இயந்திரங்களில் மணிக்கு 90 கிலோகிராம் விதை நீக்கப்பட்ட பஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. நவீன இயந்திரங்களுடன் ஒப்பிடுகையில் பழைய இயந்திரங்கள் மணிக்கு 50 முதல் 60 கிலோகிராம் பஞ்சு (lint) உற்பத்தித் திறனை மட்டுமே கொண்டுள்ளன.
சவால்கள்
• ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் துணிநூல் அமைச்சகத்தின் துணிநூல் ஆணையரால் அமைக்கப்பட்டுள்ள டெக்ஸ்டைல்ஸ் கமிட்டியானது (Textiles Committee) பருத்தி விதை நீக்கும் தொழிற்சாலைகளுக்கு, அவற்றில் நிறுவப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகளின் தரம், மேலாண்மை வழிமுறைகள் மற்றும் விதை நீக்கப்பட்ட பருத்தியின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் நட்சத்திர தரவரிசை மதிப்பீட்டை வழங்கி வருகிறது. மேம்பட்ட பருத்தி விதை நீக்கும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் தரவரிசை மதிப்பீடு, அவற்றின் செயல்பாட்டிற்கான குறியீடாக விளங்குகிறது.
• பருத்தியின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், தரத்தினை மேம்படுத்தவும் பருத்தி விதைநீக்கும் ஆலைகளை நவீனமயமாக்குவது அவசியமாகிறது. பெரும்பாலான விதை நீக்கும் ஆலைகள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வகைப்பாட்டின் கீழ் வருவதால், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் (MSME) திட்டத்தின் கீழ் பருத்தி விதை நீக்கும் ஆலைகளில் உள்ள இயந்திரங்களை நவீனமயமாக்க தமிழ்நாடு அரசு நிதியுதவி அளிக்கிறது. “பருத்தி வேளாண் சாகுபடி இலக்கின்” (Cotton Mission) கீழ் பருத்திச் சாகுபடி அதிகரிக்கப்படும்பட்சத்தில், தமிழ்நாட்டில் பருத்தி விதை நீக்கும் தொழில் வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
பருத்தி விதை நீக்கும் இயந்திரம்
பண்டைய காலத்திலிருந்தே பருத்தி தமிழ்நாட்டின் முக்கியமான வணிகப் பயிர்களுள் ஒன்றாக உள்ளது. கோவை, பெரம்பலூர், விருதுநகர் மற்றும் தருமபுரி ஆகியன தமிழ்நாட்டில் பருத்தி வேளாண் சாகுபடி செய்யப்படும் முக்கிய மண்டலங்களாகும். தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகள் பருத்தியினைப் பெரிதும் பயன்படுத்தும் போதிலும், பருத்தி வேளாண் சாகுபடியானது, உள்ளுர் சந்தைத் தேவையினைப் பூர்த்தி செய்யுமளவு போதுமானதாக இல்லை. தமிழ்நாடு நூற்பாலைகளின் வருடாந்திர பருத்தித் தேவையான சுமார் 120 இலட்சம் பேல்களில், சுமார் 5 இலட்சம் பேல்கள் மட்டுமே தமிழ்நாட்டில் விளைவிக்கப்படுகிறது.
ஆண்டு
|
உற்பத்தி
(இலட்சம் பேல்களில்)
|
சாகுபடி பரப்பு
(இலட்சம் ஹெக்டேரில்)
|
2019-20
|
6.00
|
1.70
|
2020-21
|
2.43
|
1.12
|
2021-22
|
2.96
|
1.25
|
ஆதாரம்: இந்திய பருத்தி கழகம்
சவால்கள்
தமிழ்நாட்டில் பருத்தியின் தேவை மற்றும் விநியோக நிலைகளுக்கிடையே (Demand and supply) அதிக இடைவெளி காணப்படுகிறது. தமிழ்நாட்டின் பருத்தி சாகுபடி நிலப்பரப்பு மற்றும் ஒரு ஹெக்டேருக்கான மகசூல் இந்தியாவின் பிற பகுதிகளைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. தேவை மற்றும் விநியோக நிலைகளுக்கிடையே சமநிலை இல்லாததால், இங்குள்ள நூற்பாலைகள் 95% பருத்தித் தேவையினை பிற மாநிலங்களிலிருந்து கிலோ ஒன்றுக்கு ரூ.3/- முதல் ரூ.6/- வரை கூடுதல் போக்குவரத்துச் செலவினத்துடன் கொள்முதல் செய்கின்றன.
பருத்தி சாகுபடி
கைமுறை அறுவடை
பருத்திச்சாகுபடி இலக்கு (Cotton Mission)
பருத்தி வேளாண் சாகுபடியை அதிகரிக்கும் பொருட்டு துணிநூல் துறை மற்றும் விவசாயத் துறை இணைந்து “பருத்தி வேளாண் சாகுபடி இலக்கு“ எனும் திட்டத்தை வரையறுத்து, ஒரு குழுவினை அமைத்துள்ளது. மாநிலத்திற்குள் பருத்தி உற்பத்தி மற்றும் மகசூலினை அதிகரிக்க இலக்கு நோக்கிய அணுகுமுறை அவசியம். இதில் கூடுதல் இழை நீளம் கொண்ட பருத்தி (ELS), இயற்கை பருத்தி, நீடித்த தரமிக்க பருத்தி ஆகியவற்றின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதன் பொருட்டு வேளாண் துறையின் 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.15.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பருத்தி சாகுபடியினை நவீனமயமாக்குதல் மற்றும் பருத்தி அறுவடையினை இயந்திரமயமாக்குதல்
தற்போதுள்ள பருத்தி விளையும் பகுதிகளில் பருத்தி விதைத் தொழில்நுட்பத்தினை மேம்படுத்துவதன் மூலம் மகசூலை அதிகரிப்பதன் வாயிலாகவும், வேளாண் ஆய்வு, பருத்தி அறுவடையை இயந்திரமயமாக்குதல் மற்றும் விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருட்கள் வழங்குதல் ஆகியவற்றின் வாயிலாகவும் மாநிலத்தில் பருத்தி உற்பத்தியினை அதிகரிக்க இயலும்.
தென்னிந்திய ஆலைகள் கூட்டமைப்பு-பருத்தி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி கூட்டமைப்பு (SIMA-CDRA) கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை மற்றும் வேளாண்மைத்துறை போன்றவற்றுடன் ஒருங்கிணைந்து உயர் விளைச்சலைத் தரும் பருத்தி விதை இரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பருத்தி சாகுபடியினை நவீனமயமாக்குதல், மிகச்செறிவான பருத்தி நடவு குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்தல், பருத்தி அறுவடையை இயந்திரமயமாக்குதல் ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த துணிநூல் துறை முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இயந்திரம் மூலமான அறுவடை
நூலைத் துணியாக மாற்றும் நெசவு மற்றும் பின்னலாடைப் பிரிவுகள் துணிநூல் தொழிலின் முக்கியமான பிரிவுகளாகும். இந்தியாவில் உள்ள 24.86 இலட்சம் விசைத்தறிகளில் 5.63 இலட்சம் விசைத்தறிகள் தமிழ்நாட்டில் உள்ளன. இவை நாடெங்கும் உள்ள ஆயத்த ஆடை அலகுகளின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி தேவையினைப் பூர்த்தி செய்கின்றன.
இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் பின்னலாடைப்பிரிவு
ஆடைகள் (Formal Wears), நெய்யப்பட்ட துணிகளால் தயாரிக்கப்பட்ட போதிலும், பின்னலாடைகளின் நெகிழ்வு மற்றும் அணிய ஏதுவான தன்மையின் காரணமாக அண்மைக் காலங்களில் விளையாட்டு உடைகள், கவச உடைகள், இலகுவான ஆடைகள், குழந்தைகள் ஆடைகள், மேற்கத்திய ஆடைகள் போன்றவற்றிற்குப் பின்னலாடைகள் கணிசமான வணிக வாய்ப்புகளைப் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் பின்னலாடை தொழில் வேலைவாய்ப்பு வழங்குதல் மற்றும் அன்னியச் செலாவணியை ஈட்டுதல் ஆகியவற்றில் முக்கிய பங்கினை வகிக்கிறது. தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் பின்னலாடைத் தொழிலில் திருப்பூர் ஒரு முக்கியக் குழுமமாக விளங்குகிறது. பின்னலாடைத் தொழில் எப்பொழுதும் வேலைவாய்ப்பினை வழங்கும் தொழிலாக விளங்குகிறது. தமிழ்நாட்டின் பின்னலாடைத் தொழில் பிரிவு ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நவநாகரிக உலகச் சந்தைகளிலிருந்து கொள்முதல் ஆணைகளைப் பெறும் திறன் வாய்ந்ததாக விளங்குகிறது. மாநிலத்தில் ஏறத்தாழ 13,000 பின்னலாடைகள் மற்றும் ஆடைகள் உற்பத்தி செய்யும் அலகுகள் (Units) உள்ளன. இவ்வலகுகள் அண்டை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள 6 இலட்சம் உள்ளூர் மற்றும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குகின்றன.
சுழல் பின்னலாடை இயந்திரம்
பின்னலாடை உற்பத்தியில் இந்திய அளவில், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி வணிகத்தில் திருப்பூரின் பங்களிப்பு 60% ஆகும். எதிர்வருங்காலங்களில் இது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும்.
ஆதாரம் : திருப்பூர் எக்ஸ்போர்ட்டர்ஸ் அசோசியேசன்
சவால்கள்
• தமிழ்நாட்டில் பின்னலாடைத் தொழிலானது சுமார் 6 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது. இவர்களுள் கணிசமான தொழிலாளர்கள் புலம் பெயர் தொழிலாளர்கள் ஆவர். திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கான கடும் பற்றாக்குறை பின்னலாடை தொழிலின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
• தமிழ்நாடு அரசு பகுதியளவு பயிற்சி பெற்ற மற்றும் முழுவதும் பயிற்சியற்ற தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் குறுகிய காலப் பயிற்சித் திட்டங்களை வழங்குகிறது. போதுமான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் பயிற்சியற்ற மற்றும் பகுதியளவு பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்குரிய பயிற்சித் திட்டங்களில், துணிநூல் தொழில் நிறுவனங்களும், பயிற்சிப் பங்குதாரர்களாக (Training Partners) பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறது.
துணிநூல் தயாரிப்புகளில் வண்ணங்களை பயன்படுத்துதல் மற்றும் மெருகூட்டுதல் ஆகிய பணிகளை உள்ளடக்கிய பதனிடும் தொழிலானது, துணிகளின் மதிப்பு மற்றும் தரத்தினை நிர்ணயம் செய்கிறது. பதனிடும் பணியானது துணிகளின் மீதான மதிப்பு மற்றும் தரத்தினைக் கட்டுப்படுத்தி புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. பதனிடும் முறைகள் பின்வருமாறு உள்ளன.
பதனிடுதலுக்கு உட்படுத்தப்படும் மூலப் பொருட்களின் அடிப்படையில் பதனிடும் செயல்பாட்டினைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
வ.
எண்
|
மூலப் பொருள்
|
வழிமுறை
|
1
|
இழை
|
பருத்தி இழைகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சாயமிடும் இயந்திரங்களில் சாயமிடப் படுகின்றன. மேலும், செயற்கை இழை உற்பத்தியின் போது சாயமூட்டும் நிறமிகள் இழையின் ஊடாக செலுத்தப்படுகிறது.
|
2
|
நூல்
|
நூலினைச் சாயமிடுவதன் மூலம் நெசவாளர்கள் மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் துணிகளில் கோடிட்ட (Woven Stripes), கட்டமிட்ட (Checked), கட்டு கட்டி சாயமிட்ட (Tie&dye Patterns) மற்றும் பின்னலாடைகளில் கோடிட்ட அல்லது கட்டமிட்ட (Knitted Stripes or Checked) வண்ணமயமான வடிவங்களைத் துணிகளில் கட்டமைக்க இயலும்.
|
3
|
துணி வகைகள்
|
ஒரு வண்ணத்தைப் பயன்படுத்தி துணிகளில் சாயமிட இயலும் அல்லது வெவ்வேறு அச்சிடும் நுட்பங்களைப் பயன்படுத்தி பல வண்ணக் கலவைகளாலான வடிவமைப்புகளை துணிகளில் அச்சிட இயலும்.
|
4
|
ஆடைகள்
|
முழுவதுமாகத் தயார் செய்யப்பட்ட ஆடைகளில் சாயமிடவும் அச்சிடவும் இயலும்.
|
நெசவுக்கு முந்தைய மற்றும் நெசவுக்குப் பிந்தைய நிலைகளில் நூல் மற்றும் துணிகள் பதனிடும் செய்முறையானது, உற்பத்தி செய்யப்படும் பொருளின் அடிப்படையான பயன்பாடு மற்றும் கலைநயத்துடனான மதிப்புக் கூட்டலுக்கு முக்கியப் பங்களிக்கிறது. பதனிடுதல் என்பது சலவை செய்தல், சாயமிடுதல், அச்சிடுதல் மற்றும் மெருகூட்டுதல் ஆகிய வழிமுறைகளை உள்ளடக்கியதாகும். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய நடைமுறைகளின்படி, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, “பூஜ்ஜிய திரவக் கழிவு வெளியேற்றும் அமைப்பு” (Zero Liquid Discharge) போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் வகையில் மாநில அரசு சாயமிடும் அலகுகளுக்கான நெறிமுறைகளை வகுத்துள்ளது. தமிழ்நாட்டில் 2614 கையால் இயக்கப்படும் பதனிடும் அலகுகளும் (Units), (இந்தியாவின் மொத்த அலகுகளில் 25 சதவீதம்) 985 இயந்திர பதனிடும் அலகுகளும் (Units) உள்ளன.
மாநிலத்தில் நூல் சாயமிடுதல் மற்றும் சலவை செய்தல் ஆகிய இரண்டும் பதனிடும் தொழிலின் முக்கிய செயல்முறைகளாகும். துணிகளை சாயமிடுதல் மற்றும் ரோட்டரி அச்சிடும் முறை உள்ளிட்ட அதிக அகலம் கொண்ட துணியில் அச்சிடுதலுக்கான திறன் மாநிலத்தின் தேவையினை முழுவதும் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. இதன் காரணமாக ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டார குழுமங்களில் தயாரிக்கப்படும் கிரே துணிகள், இராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூர், மத்தியப் பிரதேசத்திலுள்ள உஜ்ஜையினி, உத்திரப் பிரதேசத்திலுள்ள மீரட், குஜராத்திலுள்ள அகமதாபாத் மற்றும் சூரத் உள்ளிட்ட பகுதிகளுக்கு அச்சிடும் பொருட்டு அனுப்பப்பட்டு, அதன் பின்னர் நமது மாநிலத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. துணிநூல் பதனிடும் உட்கட்டமைப்பின் செயல்திறன் மேம்பாட்டில் தனிக் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும்.
திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் ஆகியவை முக்கிய துணிநூல் பதனிடும் குழுமங்களாகும். புதிய துணிநூல் பதனிடும் பூங்காக்களுடன் கூடிய பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள சாயச்சாலைகளை பொது சுத்திகரிப்பு நிலையங்களுடன் இணைத்தல் ஆகியவற்றின் மூலம் மாசினைக் கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், துணிநூல் குழுமங்களில் பூஜ்ஜியம் அளவில் திரவக் கழிவுகள் வெளியேற்றும் வசதியுடன் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்திடவும், அரசு முனைப்புடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதற்கிணங்க, ஒன்றிய மற்றும் மாநில அரசின் ரூ.300.00 கோடி நிதியுதவியுடன் திருப்பூரில் 18 பொது கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் 6 இலட்சம் மக்களுக்குத் தொடர் வேலைவாய்ப்பினை உறுதி செய்வதோடு, திருப்பூரில் உள்ள ஆடைகள் மற்றும் பின்னலாடைத் தொழிலுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பினையும் வழங்குகிறது.
துணிநூல் பதனிடுதலின் பல்வேறு நிலைகள்
மேலும், ஒருங்கிணைந்த பதனிடுதல் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பதினொரு பொது கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் கழிவுநீர் வெளியேற்றும் மேலாண்மை நிலையங்கள் ஈரோடு, நாமக்கல், விருதுநகர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சவால்கள்
• தமிழ்நாடு துணிநூல் மதிப்புச் சங்கிலியில் தற்போது பதனிடும் பிரிவிற்குக் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பதனிடும் பிரிவின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசின் திட்டங்களுடன் மாநில அரசும் தொடர்ந்து ஆதரவளிக்கும்.
• தற்சமயம் பிற மாநிலங்களின் செயற்திறனையே சார்ந்திருக்கும் துணி அச்சிடும் தொழிலில் நம் மாநிலத்தின் தற்சார்புத் தன்மையினை அதிகரித்திடும் பொருட்டு, செயற்திறன் கட்டமைப்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, மாநில அரசால் மூலதன மானிய நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
• சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மாநிலத்தில் பதனிடும் தொழிலை மேலும் நிலைநிறுத்தவும், மாநில அரசு வகுத்துள்ள நெறிமுறைகளின்படி கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டாயமாகும். எனவே, பதனிடும் தொழிற்சாலைகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுதல் இன்றியமையாததாகும். பதனிடும் தொழிலுக்கு ஆதரவளித்திட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், பூஜ்ஜியம் திரவ வெளியேற்றத்தில் ஆபத்தான கழிவுத் தேக்கம் மற்றும் அழிக்கும் வசதிகளைக் கட்டமைத்தல் ஆகிய இனங்களுக்கு மாநில அரசு நிதியுதவி வழங்குகிறது.
• தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்குடன், பூஜ்ஜியம் திரவ வெளியேற்றும் வசதியினைத் திறம்பட செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு, இந்தியாவிலேயே மிக நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளதால், கடலோர பகுதிகளில் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம், கடல்சார் வெளியேற்ற அமைப்புடன் (Marine Discharge System) கூடிய புதிய பதனிடும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்படும்.
• தமிழ்நாட்டில் உள்ள பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஏறத்தாழ 60,000 மெட்ரிக் டன் உப்புக்கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பாக உள்ளது. மேலும், உப்புக்கழிவுகள் நாள்தோறும் உருவாகின்றன. இந்த உப்புக் கழிவுகள் சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும்.
துணிநூல் தொழிலில் ஆயத்த ஆடை பிரிவானது, துணிகளை, ஆடை போன்ற பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றும் பிரிவாகும். ஆயத்த ஆடையானது பலதரப்பட்ட நூல்கள் மற்றும் துணிகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
ஆயத்த ஆடைப்பிரிவு உலக வர்த்தகத்தில் முக்கிய இடத்தை வகிப்பதோடு, துணிநூல் தொழிலில், வேகமாக வளர்ந்துவரும் பிரிவாக உள்ளது. வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய-பசிபிக் கண்டம், லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் ஆயத்த ஆடைகளின் முக்கியச் சந்தையாக விளங்குகின்றன. வளர்ந்து வரும் நாகரிகம், உலக ஆயத்த ஆடை தொழிலுக்கு உந்துசக்தியாக விளங்குகிறது. உலக ஆடைகள் சந்தை, 2019 ஆம் ஆண்டிலிருந்து 3% கூட்டு வருடாந்திர வளர்ச்சி (CAGR) விகிதத்துடன் வளர்ந்து, 2025 ஆம் ஆண்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பினை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய துணிநூல் மற்றும் ஆடைகள் சந்தை 2021-22 ஆம் ஆண்டில் 99 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது 2020-21 ஆம் ஆண்டைக் காட்டிலும் 30% அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இச்சந்தை 2019-20 ஆம் ஆண்டிலிருந்து 2025-26 ஆம் ஆண்டுக்குள் 10% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகித (CAGR) வளர்ச்சியுடன் 190 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பினை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் துணிநூல் மற்றும் அலங்கார ஆடைகள் ஏற்றுமதி
(பில்லியன் டாலர்கள்)
வ.
எண்
|
இனம்
|
2010-11
|
2019-20
|
2020-21
|
2021-22 (கணிப்பு)
|
1
|
இழை
|
4
|
2
|
2.7
|
3.8
|
2
|
நூல்
|
4
|
4
|
4.4
|
7.4
|
3
|
துணி
|
4
|
5
|
4.1
|
5.2
|
4
|
ஆடைகள்
|
12
|
16
|
12.3
|
14.3
|
5
|
வீட்டு உபயோக துணிகள்
|
4
|
5
|
5.7
|
6.9
|
6
|
இதர இனங்கள்
|
1
|
2
|
1.7
|
2.1
|
|
மொத்தம்
|
29
|
34
|
30.9
|
39.7
|
ஆதாரம்: வாசிர் அட்வைசர்ஸ் ஆண்டறிக்கை
தமிழ்நாடு நிலவரம்
தமிழ்நாட்டின் கணிசமான ஆடை நிறுவனங்கள் சென்னை சுற்று வட்டாரத்தினை அமைவிடமாகக் கொண்டும், குறிப்பாகப் பருத்தி மற்றும் செயற்கை இழை ஆயத்த ஆடைகள் உற்பத்தியில் தனித்துவத்துடனும் விளங்குகின்றன. பின்னலாடை நிறுவனங்கள் திருப்பூர் பகுதியில் அமைந்துள்ளன. மாநிலத்தில் சுமார் 13,000 பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் 6 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குகின்றன. திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் 2020-21 ஆம் ஆண்டில் ரூ.56,000 கோடி மதிப்பிலான பின்னலாடைகள் உற்பத்தி செய்துள்ளன.
ஆடைத் தயாரிப்பு தொழில் பெரிதும் தொழிலாளர் செறிவுமிக்கது மற்றும் பெரும்பாலும் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளாக அமைந்துள்ளன. இத்தொழில், பெரும்பான்மையாக தனியார் தொழில் முனைவோரின் முன்னெடுப்பினை சார்ந்துள்ளதாகவும் குறைந்த தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் முதலீடுகளுக்கு உட்பட்டவையாகவும் உள்ளன.
சவால்கள்
• தமிழ்நாட்டில் திறன்மிக்க தொழிலாளர்களின் தட்டுப்பாடே துணித்தொழில் எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக உள்ளது.
• தமிழ்நாடு அரசு, பகுதியளவு பயிற்சி பெற்ற மற்றும் முழுவதும் பயிற்சியற்ற தொழிலாளர்களுக்குத் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாகத் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் குறுகிய காலப் பயிற்சித் திட்டங்களை வழங்குகிறது. போதுமான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதன் மூலம், பகுதியளவு பயிற்சி பெற்ற மற்றும் முழுவதும் பயிற்சியற்ற தொழிலாளர்களுக்குரிய பயிற்சித் திட்டங்களில் துணிநூல் தொழில் நிறுவனங்கள் பயிற்சி பங்குதாரர்களாகப் (Training Partners) பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு, வாகனம் மற்றும் மருத்துவ
ஜவுளிகள் (தொழில்நுட்ப ஜவுளிகள்)
அழகியல் மற்றும் அலங்காரம் சார்ந்த பயன்பாட்டை விட, செயல்திறன் மற்றும் செயல் சார்ந்த பண்புகளை முன்னிறுத்தி தயாரிக்கப்படும் துணிநூல் தயாரிப்புகள் தொழில்நுட்ப ஜவுளிகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
தொழில்நுட்ப ஜவுளிகள் என்பவை வாகனம் சார்ந்த பயன்பாடுகள், மருத்துவ ஜவுளிகள் (எ.கா: உட்பொருத்தும் சாதனங்கள்-Implants) புவிசார் ஜவுளிகள் (எ.கா: தடுப்பணை வலுவூட்டுதல்), வேளாண் ஜவுளிகள் (எ.கா: பயிர் பாதுகாப்புக்கான துணி வகைகள்) மற்றும் பாதுகாப்பு உடைகள் (எ.கா: தீத்தடுப்பு மற்றும் வெப்பத்தடுப்பு, கதிரியக்க பாதுகாப்பு ஆடைகள், உருக்கிய உலோக பொறிகளிலிருந்து பாதுகாப்பு, குண்டு துளைக்காத கவச உடைகள் மற்றும் விண்வெளி கவச உடைகள்) ஆகியவையாகும்.
பல்லாண்டுகளாகத் தொழில்நுட்ப ஜவுளிகள் உலகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை புவிசார் தொழில்நுட்பப் பொறியியல், கட்டுமானப் பொறியியல், உட்கட்டமைப்பு மற்றும் நீர் மேலாண்மை திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளில் புதுமையான பொறியியல் தீர்வுகளை வழங்கி வருகின்றன.
தொழில்நுட்ப ஜவுளியானது வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் விரிவான அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் போதிலும், இந்தியாவில் தொழில்நுட்ப ஜவுளிகள் மூலம் தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பயன்களை பெறுவதற்கு, அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டியுள்ளது.
தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூன்று வகையான மூலப்பொருட்களின் விவரம் பின்வருமாறு:
வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப ஜவுளிகள் துணைப்பிரிவானது, பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இவை, உபயோகத்தின் அடிப்படையில், பின்வரும் 12 முக்கிய பிரிவுகளில் காணப்படுகின்றன.
தொழில்நுட்ப ஜவுளிகளின் முக்கிய பிரிவுகள்
தொழில்நுட்ப ஜவுளித்தொழிலின் முக்கிய பிரிவுகளில் உள்ள வாய்ப்புகள்:
i) பாதுகாப்பு ஜவுளிகள் (Protective Textiles)
தொழிலியல் கையுறைகள் (Industrial gloves):
தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குத் தொழிலியல் கையுறைகள் பாதுகாப்பு உடைகளுள் ஒன்றாக பயன்படுகிறது.
உயர்நிலை ஆடைகள் (High Altitude Clothing): உயர்நிலை ஆடைகள் மிகக் குறைந்த தட்பவெப்பநிலை, பலத்த காற்று, பனிப்பொழிவு உள்ளிட்ட அதீத வானிலை சூழல்களிலிருந்து, குறிப்பாக சீயாச்சின் போன்ற போர்மேகம் சூழ்ந்த அபாயகரமான பகுதிகளில் பாதுகாப்பை அளிக்க பயன்படுத்தப்படுகின்றன.
வேதிப்பொருள் பாதுகாப்பு ஆடைகள் : வேதிப்பொருட்கள் மற்றும் இதரவகை சார்ந்த அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு வேதிப்பொருள் பாதுகாப்பு ஆடைகள் பயன்படுத்தப்படுகின்றன.
உயர் தெரி நிலை ஆடைகள் : பிரதிபலிக்கும் ஆடைகள் (Reflective-wear) என அழைக்கப்படும் உயர் தெரி நிலை ஆடைகள், சுரங்கங்கள், நெடுஞ்சாலைகள், விமானநிலைய ஓடுதளங்கள் மற்றும் மிதிவண்டி ஓட்டிகள் ஆகிய குறைவான வெளிச்சம் மட்டுமே நிலவும் சூழ்நிலைகள் / பகுதிகளில் பணிபுரியும் மக்களின் பாதுகாப்புக்கு இன்றியமையாததாக உள்ளது.
ஹஸ்மாட் கவச உடைகள் : வேதிப்பொருட்கள், கதிரியக்க பொருட்கள் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் கழிவுப்பொருட்களை கையாளுபவர்களை பாதுகாக்கும் பொருட்டு ஹஸ்மாட் கவச உடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தீ / சுவாலை தடுப்பு ஆடைகள்: தீ / சுவாலை தடுப்பு ஆடைகள், தீ மற்றும் இதர வெப்பச்செறிவு பணிகளிலிருந்து பாதுகாப்பு வழங்கும் பொருட்டு தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படுகின்றன.
குண்டு துளைக்காத கவச உடைகள் : பல்வேறு வகையான வடிவங்கள், அளவுகள் மற்றும் வேகங்களில் வீசப்படும் எறி பொருட்கள், சிதறும் துண்டுகள் ஆகியவற்றிலிருந்து அணிபவர்களின் உடல் மற்றும் கண்களை பாதுகாக்கும் பொருட்டு, குண்டு துளைக்காத கவச உடைகள் பயன்படுத்தப்படுகின்றன.
1) Industrial gloves
2) High altitude clothing
3) Hazmat suit
4) Fire retardant clothing
5) Chemical Protective Clothing
6) Bullet proof vest
7) High visibility clothing.
ii) வாகன ஜவுளிகள்
1. Nylon tyre cord
2. Seat belt
3. Car upholstery/seat cover
4. Airbag.
நைலான் டயர் கார்டு: நைலான் டயர் கார்டு துணியானது, வாகன டயர்களுக்கு வலுவூட்டுகின்றன. மொத்த நைலான் டயர் கார்டு பயன்பாட்டில் 98% அளவிற்கு டயர் தொழிலில் உபயோகிக்கப்படுகிறது.
இருக்கை பெல்ட்கள் : இருக்கை பெல்ட்கள் விபத்து போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின்போது அபாயகரமான மோதல்கள் நிகழாவண்ணம், வாகனத்தில் பயணிக்கும் பயணிகளைக் காக்கும் பாதுகாப்பு கவசமாக பயன்படுகிறது. இருக்கை பெல்ட்கள் நைலான் இழைகள் அல்லது அதிக வலுவுடன் கூடிய பாலியஸ்டர் இழைகளால் நெய்யப்பட்ட குறுகிய துணிப் பட்டையாகும்.
வாகன இருக்கை அமைப்புகள்/ இருக்கை உறைகள் : கார் இருக்கை உறைகள், வாகனம் சார்ந்த தொழில்நுட்ப ஜவுளிகளின் முக்கியமான ஒன்றாகும். வாகனங்களில் ஏற்பட்டுள்ள படிப்படியான முன்னேற்றம் மற்றும் ஆடம்பர வசதிகளின் மீது அதிகரித்து வரும் விருப்பம் காரணமாக, வாகன இருக்கை உறைகளுக்கான சந்தை ஏறுமுகத்தில் உள்ளது.
காற்றுப்பைகள் : விபத்தின் போது ஏற்படும் காயங்களின் தாக்கத்தினை குறைக்கும் பொருட்டு, பொருத்தப்படும் விரிவடையக்கூடிய பாதுகாப்பு சாதனங்களே காற்றுப்பைகளாகும். காற்றுப்பைகள் முக்கியமாக நைலான் 66 அல்லது பாலியமைடு 66 மற்றும் சிலிக்கான் பூச்சுடன் கூடிய நூல்/துணியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன.
iii) மருத்துவ ஜவுளிகள்
குழந்தைகள் அணையாடை: பிறந்த குழந்தைகளுக்கு 24 மாதங்கள் வரை உடற்கழிவுகளை உறிஞ்சி தேக்கி வைக்கும் பொருட்டு அணையாடைகள் பயன்படுத்தப் படுகின்றன. அணையாடைகள் துணியாலான அடுக்குகளுக்கு இடையில் உறிஞ்சும் திண்டுகளை அமைத்துத் தயாரிக்கப்படுகின்றன.
ஒருமுறை பயன்படுத்தும் மருத்துவ ஜவுளி வகைகள் : மருத்துவ ஜவுளி வகைகளில் முகக்கவசம், தலைக்கவசம், திரை, நீள் அங்கிகள், உறைகள், காலணி உறைகள் மற்றும் களையக்கூடிய அறுவை சிகிச்சை பயன்பாட்டு துணிகள் ஆகியவை அடங்கும். இவை பாலிஎத்திலீன் படலத்துடன் கூடிய அல்லது பாலிஎத்திலீன் படலமற்ற பாலி புரப்பொலீன் பிணைப்பு (Spun bond) துணிகளால் (நெய்யப்படாதவை) தயாரிக்கப் படுவதாகும். இவை மருத்துவமனைகளிலும், மருந்தியல் நிறுவனங்களிலும் சுகாதாரத்தினைப் பேணும் பொருளாகவும், கிருமி தொற்று தடுப்பானாகவும் பயன்படுகின்றன.
சிகிச்சைக்கான கட்டுப் பொருட்கள் : இவை காயங்களைத் துரிதமாக குணப்படுத்திடவும், திறந்த நிலைக் காயங்களால் மேலும் தீங்கு நேராமல் தடுக்கவும் பயன்படுத்தப்படும் கட்டு பொருட்கள் ஆகும். இவற்றை பேண்டேஜ் மற்றும் காயப் பராமரிப்பு அடுக்குகள் (Wound care layer) என முக்கியமாக வகைப்படுத்தலாம்.
1. Baby Diapers
2. Surgical Disposables
3. Surgical Dressing Materials
4. Implantable Materials
5. Extra-Corporeal Devices.
உட்பொருத்தும் பொருட்கள் : இவை மூடுதல், பழுது பார்த்தல், மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக மனித உடலின் உள்ளே பயன்படுத்தப்படும் துணிநூல் கட்டமைப்புகள் ஆகும். தையல்கள் (Sutures), தமனி ஒட்டிகள் (Vascular graft), செயற்கை தசை நார்கள் (Artificial ligaments), செயற்கை மூட்டுகள் (Artficial Joints), திசு வளர்ச்சிக்கான சாரக்கட்டுகள் (scoffolds for tissue growth) மற்றும் பல பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை ஒவ்வொன்றும் பொருத்தமான பலன்களை நோயாளிகளுக்கு வழங்குகின்றன.
கூடுதலான உடல் சார்ந்த சாதனங்கள்: இவை நோயுற்ற ஒருவரின் உடல் உறுப்புகளை மாற்றிட உதவும் செயற்கை உறுப்புகளாகும். இவை செயற்கையான சிறுநீரகம் (Kidney), கல்லீரல் (Liver), நுரையீரல் (Lungs) ஆகியனவாகும். இச்சாதனங்களை உருவாக்கிட நுட்பமான வடிவமைப்பும் தயாரிப்பும் அவசியமாகின்றன.
iv) புவிசார் ஜவுளிகள்
1. Construction of roads
2. Railway
3. River Canal and Coastal Work
4. Drainage.
சாலைகள் கட்டுமானம்: திறன்வாய்ந்த புவிசார் ஜவுளிகள், சாலையின் அடித்தளத்தைப் பாதுகாத்திடவும், சாலையின் வடிவமைக்கப்பட்ட கட்டமைப்பு மற்றும் சுமை தாங்கும் திறனைப் பராமரிக்கவும் பிரிப்பானாகச் செயல்படுகிறது.
இரயில்வே : கரடுமுரடான மண்ணைக் கொண்டு இருக்கும் இடத்தில் (எ.கா. மணல் மற்றும் சரளைகள்) புவிசார் ஜவுளிகளானது, துகள்கள் மற்றும் கற்களிடையே ஒரு பிரிப்பானாக செயல்படுகிறது.
கால்வாய் மற்றும் கரையோர பணிகள்: மண் அரிப்பு பாதுகாப்புக் கட்டமைப்புகள் அரிப்பை ஏற்படுத்தும் நீர் அழுத்த சக்தியை சிதறடிக்கின்றன, மேலும் அவை மண் அரிப்பைத் தடுத்து மண்ணைப் பாதுகாக்கின்றன.
வடிகால் :: நிலம் சார்ந்த கட்டுமானப் பணிகளில் வடிகால்களுக்கு புவிசார் ஜவுளிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. புவிசார் ஜவுளிகள் வடிகால் அமைப்பின் ஒரு பகுதியாக மட்டுமின்றி, அவையே முழுமையான வடிகால் அமைப்பாகவும் செயல்படுகிறது.
v) வேளாண் ஜவுளிகள்
விவசாயம் மற்றும் தோட்டக்கலை, இயற்கை தோட்டக்கலை மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் நெய்த, (Woven), நெய்யப்படாத (Non Woven) மற்றும் பின்னப்பட்ட(Knitted) துணிகள் ஆகியவை வேளாண் ஜவுளிகள் என அழைக்கப்படுகின்றன. விவசாயம், தோட்டக்கலை மற்றும் மலர் வளர்ப்புப் பிரிவுகளில், நீர் ஆவியாகாமல் தடுக்கும் நிழல் வலைகள், தரைக்காப்பான் (Ground Cover), பயிர் காப்பு வலை (Crop cover) போன்ற பொருத்தமான விவசாய ஜவுளிப் பொருட்களுக்கு மகத்தான வாய்ப்புகள் உள்ளன.
தொழிற்சாலைகளுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் ஜவுளிகள், மற்றும் குறிப்பிட்ட தொழிலுக்கெனவும், குறிப்பான நோக்கத்திற்காகவும் வடிவமைக்கப்பட்ட ஜவுளிகள் தொழிலியல் ஜவுளிகள் என்று அழைக்கப்படுகின்றன.
vii) கட்டுமான ஜவுளிகள்
கட்டடங்கள் மற்றும் கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் ஜவுளிகள் கட்டுமான ஜவுளிகள் என அழைக்கப்படுகின்றன. கட்டுமானங்களின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும், வெளிப்படையான மற்றும் மறைக்கப்பட்ட பயன்பாடுகளுக்கு இத்துணிவகைகள் பயன்படுத்தப் படுகின்றன. ஒலி புகாத்தன்மை மற்றும் வெப்பக் காப்புக்காகவும், சூரிய ஒளி, காற்று, வெப்பம் மற்றும் நீர் ஆகியவற்றிலிருந்து கட்டடத்தினை பாதுகாப்பதற்காகவும் கட்டுமான ஜவுளிகள் பயன்படுத்தப்படுகின்றன.
viii) ஆடை தொழில்நுட்ப ஜவுளிகள்
ஆடை தொழில்நுட்ப ஜவுளிகள் என்பது ஆடை மற்றும் காலணிகளில் அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் அனைத்து ஜவுளிக் கூறுகளையும் உள்ளடக்கிய தொழில்நுட்ப ஜவுளிகளின் ஒரு பிரிவாகும். இது ஜிப்பர்கள்(Zippers), லேபிள்கள்(Lables), தையல் நூல்கள்(Sewing threads), எலாஸ்டிக்ஸ், இன்சுலேடிங் ஃபைபர் ஃபில்ஸ், வாடிங்ஸ்(Waddings), ஷூலேஸ்கள், டிராக்கார்ட்ஸ் வெல்க்ரோ(Velcro), இன்டர்லைனிங் துணிகள் உள்ளிட்ட வெளியில் தெரியாத செயல்பாட்டுப் பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
ix) வீட்டு உபயோக ஜவுளிகள்
வீட்டு உபயோக ஜவுளிகள் என்பது, வீட்டின் உட்புற சூழலில் பயன்படுத்தப்படும் தலையணைகள் (Pillows), உள் அலங்கார வேலைப்பாடு, வீட்டு உபகரணங்கள், தரை விரிப்புகள், சூரியத் தடுப்புகள், மெத்தை இரகங்கள், தீத்தடுப்பு, தரை மற்றும் சுவர் உறைகள், வலுவூட்டப்பட்ட ஜவுளி கட்டமைப்புகள் (Reinforced structures), தூசி உறிஞ்சிகளுக்கான வடிப்பான்கள் (filters) போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
x) கட்டுதல் சார் ஜவுளிகள்
கட்டுதல் சார் ஜவுளிகள் என்பது தொழில்நுட்ப ஜவுளிப் பயன்பாடுகளில் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். அதிக எடையிலான நெய்யப்பட்ட துணிகள், பைகள், சாக்குகள், ஜவுளி பேல்களுக்கான உறைகள் மற்றும் தரைவிரிப்புகளுக்கான உறைகள் ஆகியவை கட்டுதல் சார் ஜவுளிகளில் அடங்கும். மேலும் நீடித்த காகிதங்கள் (Durable Papers), தேநீர் பைகள் (Tea bags) மற்றும் பிற உணவு மற்றும் தொழில்துறை தயாரிப்பு உறைகளாகப் பயன்படுத்தப்படும் இலகுரக நெய்யப்படாத துணி வகைகளும் (Non-woven) இதில் அடங்கும்.
xi) விளையாட்டு ஜவுளிகள்
விளையாட்டு ஜவுளிகள் என்பது தொழில்நுட்ப ஜவுளியின் பல்வேறு கிளைகளில் ஒன்றாகும். பல்வேறு விளையாட்டுகளில், வீரர்கள் அணியும் ஜெர்சி எனப்படும் டி-ஷர்ட்கள், கால்சட்டை, ஷார்ட்ஸ், தொப்பிகள், காலணிகள் போன்ற விளையாட்டு உடைகள் மற்றும் இதர அணிகலன்கள் விளையாட்டு ஜவுளிகள் என்று அழைக்கப்படுகின்றன.
தொழில்நுட்ப ஜவுளிகளின் உலக நிலவரம்
தொழில்நுட்ப ஜவுளிகள், உலகத் துணித்தொழில் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இது மொத்தத் துணிநூல் உற்பத்தியில் 31% ஆக உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியினை உணர்ந்து, தொழில்நுட்ப ஜவுளிகளுக்கு ஏற்றவகையில் நாடுகள் தங்கள் தொழில்களைச் சீரமைத்து வருகின்றன. இந்த மாற்றம், இந்திய ஜவுளித் துறையிலும் பாரம்பரியத் துணித்தொழிலிருந்து தொழில்நுட்ப ஜவுளிகளுக்கு மாற்றம் பெறுவதில் எதிரொலிக்கிறது.
பாதுகாப்பு (Protech), வாகனம் (Mobil-tech), தொழில்துறை (Indu-tech) மற்றும் விளையாட்டு
(Sports-tech) ஆகியவை சார்ந்த தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளுக்கான உலகச் சந்தை மதிப்பு 2018 ஆம் ஆண்டில் 165 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. வாகனம் சார்ந்த தொழில்நுட்பம் (Mobiltech), தொழில்துறை சார்ந்த தொழில்நுட்பம் (Indutech) மற்றும் விளையாட்டு சார்ந்த தொழில்நுட்பம் (Sports-tech) ஆகியன உலக தொழில்நுட்ப ஜவுளி தொழிலில் பெரும் பிரிவுகளாக 52% சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது. ஐரோப்பா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் சேர்ந்து உலகத் தொழில்நுட்ப ஜவுளிகள் சந்தையில் 50% உற்பத்தியையும் கொண்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில் தொழில்நுட்ப ஜவுளிகளின் பிரிவு வாரியான உலகச் சந்தை நிலவரம் பின்வருமாறு.
ஆதாரம் : வாசிர் அட்வைசர்ஸ் ஆண்டறிக்கை
ஆதாரம்: எக்சிம் வங்கி அறிக்கை
தொழில்நுட்ப ஜவுளிகளின் இந்திய நிலவரம்
உலக அளவில் பாரம்பரியம் மிக்க துணிநூல் மற்றும் இயற்கை இழை நெசவு நீண்ட காலமாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இந்தியா தொழில்நுட்ப ஜவுளி தொழிலிலும் முக்கியப் பங்கேற்பாளராக வளர்ந்து வருகிறது.
தொழில்நுட்ப ஜவுளிகள் இந்தியாவின் மொத்த ஜவுளி மற்றும் ஆடைச் சந்தையில் உத்தேசமாக
13 % மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7% பங்களிப்பினை வழங்குகிறது. நவீனமயமாதல் மீதான இந்தியாவின் ஆர்வம் மற்றும் அதன் போட்டியிடும் தன்மை ஆகிய காரணிகள் இந்தப் பிரிவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது.
2018ஆம் ஆண்டில் தொழில்நுட்ப துணிநூல் சந்தையில் பிரிவு வாரியான விவரங்கள் பின்வருமாறு.
ஆதாரம் : வாசிர் அட்வைசர்ஸ் ஆண்டறிக்கை
இந்தியா உலக மக்கள் தொகையில் 2-வது பெரிய நாடாக உள்ளது. இருப்பினும், தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவில் இந்தியாவின் தனிநபர் பயன்பாடானது, ஒரு சில வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் ஐந்தில் ஒரு பங்காக மட்டுமே உள்ளது. எனவே, உள்நாட்டுச் சந்தையில் தொழில்நுட்ப ஜவுளிகளின் வளர்ச்சிக்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்தியாவில் தொழில்நுட்ப ஜவுளிகள் 12% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் தொழில்நுட்ப ஜவுளிகள் ஏற்றுமதி 2020-21 ஆம் ஆண்டில் சுமார் 2,370 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இதன் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 2015-16 ஆம் ஆண்டிலிருந்து 9% ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவின் தொழில்நுட்ப ஜவுளிகள் இறக்குமதியின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 2015-16 ஆம் ஆண்டிலிருந்து 2018-19 ஆம் ஆண்டுக்குள்
10 விழுக்காடு அதிகரித்துள்ளது.
2015-16 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தொழில்நுட்ப ஜவுளிகளின் ஏற்றுமதி இறக்குமதி விபரங்கள் பின்வருமாறு:-
ஆதாரம் : வாசிர் அட்வைசர்ஸ் ஆண்டறிக்கை
தமிழ்நாட்டில் தொழில்நுட்ப ஜவுளிகளுக்கான வாய்ப்புகள்
தமிழ்நாடு மிகப்பெரிய ஜவுளி மையமாக (Hub) விளங்குகிறது. கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு, ஆடை தொழில்நுட்ப ஜவுளிகள் (Clothtech) மற்றும் வீட்டு உபயோக ஜவுளிகளின் (Hometech) ஆகிய பிரிவுகள் மூலமாக தொழில்நுட்ப ஜவுளித் தொழிலில் வளர்ச்சி அடைந்துள்ளது. மாநிலத்தில் கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள் அதிக அளவில் கரூரில் அமைந்துள்ளன.
இந்தியாவின் பெரிய வாகன மற்றும் வாகன உதிரி பாகங்களுக்கான குழுமமாக (Cluster), தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் அதிக மதிப்பிலான மற்றும் உயர் தொழில்நுட்பம் சார்ந்த வாகன தொழில்நுட்ப ஜவுளிகளுக்கான முதலீட்டினை ஈர்க்க ஏதுவான சூழல் நிலவி வருகிறது. இதே போன்று தமிழ்நாட்டின் 50% பாரம்பரிய துணிநூல் ஆலைகள், பின்னலாடை நிறுவனங்கள், நெசவுக் குழுமங்கள் ஆகியவையும் மற்றும் அதிக அளவிலான மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் திருப்பூர், கோவை பகுதிகளில் உள்ள காரணத்தால், இப்பகுதிகள் மருத்துவ தொழில்நுட்ப ஜவுளி (Meditech) சார்ந்த முதலீடுகளுக்கான அளப்பரிய வாய்ப்புகளை வழங்குகின்றன.
2017-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப ஜவுளிகள் சார்ந்த பயிற்சிகளை வழங்க கோவை சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டுத் துணிநூல் மற்றும் மேலாண்மைப் பள்ளியினை நியமித்துள்ளது. இதற்கென தமிழ்நாடு அரசால் ரூ. 50.00 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.