இந்தியாவின் வளமான, காலங்களைக் கடந்த கலாச்சார பாரம்பரியத்தினை கைத்தறி தொழில் பிரதிபலிக்கிறது. இத்தொழில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கைவினைச் சிறப்பை வெளிப்படுத்தும் நீண்ட பாரம்பரிய கலையாக நெசவுத் தொழில் விளங்கி வருகிறது. குறைந்த மூலதனச் செறிவு, அதிகளவிலான மனிதவள பயன்பாடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் தனித்துவம் வாய்ந்த இரகங்களின் சிறிய அளவிலான உற்பத்திக்கான நெகிழ்வுத்தன்மை ஆகியன இத்தொழிலின் சிறப்பம்சங்கள் ஆகும். இத்தொழில் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு திறனை கொண்டு செல்வதன் மூலம் மற்றும் வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைக்கேற்பவும், சந்தைத் தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வதன் மூலமாகவும் நீடித்து வருகிறது.
நான்காவது அகில இந்திய கைத்தறி கணக்கெடுப்பு 2019-2020-ன்படி, கைத்தறிகளின் எண்ணிக்கையில், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு அடுத்தபடியாக, தமிழ்நாடு மூன்றாம் இடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் 2.44 இலட்சம் கைத்தறி நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதுடன் நாட்டில் உள்ள மொத்த கைத்தறிகளின் எண்ணிக்கையில் 7.07 சதவீதமும், நெசவாளர்களின் எண்ணிக்கையில் 6.90 சதவீதமும் பங்களிக்கிறது.
விவசாயத்திற்கு அடுத்தபடியாக, கைத்தறி தொழிலானது ஒரு பொருளாதார நடவடிக்கையாக மாநிலத்தில் கிராமப்புற பகுதிகளில் அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கி முக்கிய பங்கு வகித்து வருகிறது.
தமிழ்நாட்டின் கைத்தறித் தொழில் பல்லாயிரம் ஆண்டு தொன்மையும், உயரிய பாரம்பரிய சிறப்பும், சிறப்பான வேலைப்பாடுகள் கொண்ட கைவினைத் தொழிலாகும். மாநிலத்தின் கைத்தறி நெசவு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இந்திய அளவில் கைத்தறி தொழிலில் தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக திகழ்வதுடன், உலகளவில் பிரசித்தி பெற்ற உயர் தரத்திலான கைத்தறி இரகங்களை நுணுக்கமான வேலைப்பாடுகள், வடிவமைப்புகள் மற்றும் பல்வேறு வண்ணக்கலவைகளுடன் உற்பத்தி செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் அந்தந்த பகுதிகளின் தனித்துவ வேலைப்பாடுகள் மற்றும் தோற்றத்தின் அடிப்படையில், பல்வேறு வகையான கைத்தறி இரகங்கள் உற்பத்தி செய்யும் கைத்தறி செறிவுப் பகுதிகளாக உள்ளன. தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர் குடும்பங்களில்
60 விழுக்காட்டினர் கூட்டுறவு அமைப்பிலும், எஞ்சிய
40 விழுக்காட்டினர் தனியார் நெசவாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அமைப்புசாரா முறையிலும் என இரு வகைகளில் நெசவுத் தொழில் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி செறிவுப் பகுதிகள்
தேசிய அளவில் கைத்தறி தொழிலில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் எண்ணிக்கை 1970-ஆம் ஆண்டில் 124 இலட்சத்திலிருந்து, தற்போது 35 இலட்சமாக குறைந்துள்ளது. சற்றேறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு மேலாக கைத்தறி நெசவாளர்கள் வேறு தொழில்களுக்கு செல்வதாலும், மாநிலத்தின் கல்வி அறிவு வெகுவாக முன்னேறி உள்ளதால் அதிக வருவாய் ஈட்டும் தொழில்களுக்கு செல்வதாலும், தமிழ்நாட்டில் கைத்தறி நெசவாளர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் போக்கு காணப்படுகிறது.
விசைத்தறிகள், தானியங்கி தறிகள் மற்றும் அவற்றின் அதிகளவிலான உற்பத்தி திறனால் தமிழ்நாட்டின் கைத்தறி தொழில் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது.
கைத்தறி தொழிலை சார்ந்துள்ள நெசவாளர்களை தக்க வைத்துக்கொள்வதும், இத்தொழிலை நம்பியுள்ள இலட்சக்கணக்கான நெசவாளர்களுக்கு தொடர்ந்து வாழ்வாதாரம் ஏற்படுத்துவதுமே அரசின் அணுகுமுறை ஆகும். இதற்கு, சந்தையில் அதிகளவில் விற்பனையாகும் இரகங்களை உற்பத்தி செய்வதற்கான திறனை தொடர்ந்து மேம்படுத்துவது, உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் தொழில்நுட்ப மேம்பாடு, சந்தையில் போட்டியிடும் வகையில் தரமான இரகங்களை உற்பத்தி செய்வது, இத்தொழிலின் அனைத்து நிலைகளிலும் இரக மாற்றம் மேற்கொள்வது மற்றும் சர்வதேச அளவில் பெருமளவு சந்தை தேவை உள்ள இரகங்களை உற்பத்தி செய்வதற்கான தொடர் வடிவமைப்பு உள்ளீடுகள் போன்ற நடவடிக்கைகள் தேவையாக உள்ளன.
கைத்தறி தொழிலின் கலை மற்றும் கலாச்சாரத்தினை பாதுகாக்கவும், நெசவாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் பொருட்டு ஜவுளித்தொழிலின் மதிப்பு தொடரில் வலுவான உட்கட்டமைப்பு, ஜவுளித் தொடரின் அனைத்து நிலைகளிலும் பல்வேறு நடவடிக்கைகள், வடிவமைப்புகள் உருவாக்குவதற்கு கோ-ஆப்டெக்ஸ் மற்றும் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனம், தேசிய வடிவமைப்பு நிறுவனம் மற்றும் பிற வடிவமைப்பாளர்களுடன் இணைந்து செயல்படுதல், மூலப்பொருள் உற்பத்திக்கு கூட்டுறவு நுற்பாலைகள், நெசவுக்கு தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனைக்கு கோ-ஆப்டெக்ஸ், லூம்வேர்ல்டு மற்றும் தொடக்க சங்கங்களின் விற்பனையகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒன்றிய ஜவுளி அமைச்சகத்தின் கைத்தறி வளர்ச்சி ஆணையரின் கட்டுப்பாட்டில் கீழ் தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் சேலம் பகுதிகளில் செயல்பட்டு வரும் நெசவாளர் சேவை மைய அலுவலகங்களும் மாநிலத்தின் கைத்தறி தொழிலின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
கைத்தறி தொழிலில் சிறந்த வடிவமைப்புகளை உருவாக்கும் பொருட்டும், நெசவாளர்கள், ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் தங்களது வடிவமைப்புகள் மற்றும் இரகங்களை மேம்படுத்தும் பொருட்டும், தங்களுக்கு தேவையான வடிவமைப்புகளை பெற்றுக்கொள்ளும் வகையிலும், காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையத்தில் “கைத்தறி வடிவமைப்பு ஆதார மையம்” செயல்பட்டு வருகிறது.
கைத்தறி
தமிழ்நாட்டில் 31.03.2022 நிலவரப்படி 1,107 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கைத்தறி நெசவாளர்கள் பெருமளவில் வசித்து வரும் கிராமம் மற்றும் புறநகர் பகுதிகளில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. 2021-22-ஆம் ஆண்டில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் ரூ.1021.61 கோடி மதிப்பிலான கைத்தறி துணிகள் உற்பத்தி செய்து, ரூ.1284.63 கோடி மதிப்பிற்கு விற்பனை செய்துள்ளன.
ஜவுளித் தொழிலின் பிரிவுகளில், துணி உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்குவதில் விசைத்தறி தொழில் ஒரு முக்கிய பிரிவாகும். ஆயத்த ஆடை பிரிவு மற்றும் வீட்டு உபயோக ஜவுளி இரகங்கள் பிரிவு ஆகியவை தங்களின் துணித்தேவைக்கு விசைத்தறி தொழிலையே வெகுவாக நம்பியுள்ளது. இத்தொழிலின் தொழில்நுட்ப நிலையானது சாதா தறியிலிருந்து உயர் தொழில்நுட்ப நாடாயில்லா விசைத்தறி வரை உள்ளது.
விசைத்தறி கூடத்தில் விசைத்தறி தொழிலாளர்
விசைத்தறி தொழிலில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக அதிகளவில் விசைத்தறிகள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. விசைத்தறி தொழிலில் காடா மற்றும் பதனிடப்பட்ட துணி இரகங்கள் பெருவாரியாக உற்பத்தி செய்யப்படுகிறது. விசைத்தறி தொழிலில் துணி உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும், நாட்டில் ஏற்றுமதி வருவாய் ஈட்டுவதிலும் இத்தொழில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. தாராளமயமாக்கப்பட்ட பொருளாதார சூழ்நிலைகளில், உரிமம் பெறப்படாத விசைத்தறி தொழில் சீரான முறையில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது.
இந்தியாவில் மொத்தம் உள்ள 24.86 இலட்சம் விசைத்தறிகளில், நமது மாநிலத்தில் ஏறத்தாழ
5.63 இலட்சம் விசைத்தறிகள் உள்ளன. இதில், 68,119 விசைத்தறிகள், தமிழ்நாட்டில் கூட்டுறவு அமைப்பில் 223 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் இயங்கி வருகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள விசைத்தறி செறிவுப் பகுதிகள்
விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பள்ளி மாணாக்கர்களுக்கு தேவைப்படும் சீருடை துணிகள் மற்றும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கான துணிவகைகள் பெருமளவில் உற்பத்தி செய்து வருகின்றன. 2021-22-ஆம் ஆண்டில் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் ரூ.616.50 கோடி மதிப்பில் 17.85 கோடி மீட்டர் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
விசைத்தறி தொழில் தற்போது “குறைந்த உற்பத்தி திறன்” மற்றும் “இத்தொழில் ஈடுபட்டுள்ளவர்களின் குறைந்த பணித்திறன்” ஆகிய இரண்டு முக்கிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
எனவே, விசைத்தறி தொழிலின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அரசு பின்வரும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது:
1)உற்பத்தி திறன் மற்றும் திறன் மேம்பாட்டுக்கு தேவையான உட்கட்டமைப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது ;
2) பல்வேறு வகையான திட்டங்கள் மற்றும் பங்களிப்புடன் இத்தொழிலின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது ;
3) தொழில்நுட்ப மேம்பாட்டுடன் கூடிய நவீன தறிகளை நிறுவுதல் மற்றும் அதிகளவில் உயர்தொழில் நுட்ப நெசவுப் பூங்கா அமைத்தல் ;
4) தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த
ஜவுளிக் கொள்கையில் வகுக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகைகளை விசைத்தறி தொழிலுக்கு வழங்குதல்.
மேற்காணும் நடவடிக்கைகள், இத்தொழிலில் உற்பத்தி திறனை அதிகரிப்பதோடு அதிகமான வேலை வாய்ப்பினை உருவாக்குவதையும் உறுதி செய்யும்.