தமிழ்நாடு சரிகை ஆலை, பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேவைப்படும் சரிகையினை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் 1971-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1974-ஆம் ஆண்டு முதல் வணிக ரீதியிலான உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் ISO:9001:2015 தரச்சான்று பெற்ற மாநில அரசு சார்ந்த ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவைப்படும் 60 சதவீத சரிகையினை உற்பத்தி செய்து நியாயமான விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம், காஞ்சிபுரத்தில் நிறுவியுள்ள "எக்ஸ்ரே ஊடுகதிர் பகுப்பாய்வு இயந்திரம்" (X-Ray Fluorescence Analyser) மூலம் சரிகை மாதிரிகள் மற்றும் சரிகையை கொண்டு தயாரிக்கப்பட்ட துணிகள் போன்றவற்றிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் (Non–Destructive Testing Method) அவற்றில் உள்ள சரிகையின் தரத்தை ஆய்வு செய்யும் பணியையும் மேற்கொள்கிறது.
தமிழ்நாடு சரிகை ஆலையில் தற்போது 6 பணியாளர்கள் மற்றும் 49 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு சரிகை ஆலையின் தொழிலாளர்களுக்கு நடைமுறையிலிருந்த ஊதிய ஒப்பந்தம் 23.11.2018 அன்றுடன் முடிவடைந்தது.
அரசாணை (நிலை) எண்.24 கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் (இ1) துறை, நாள்.17.02.2020-ன்படி தமிழ்நாடு சரிகை நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.1750/- வீதம் 24.11.2018 முதல் ஊதிய உயர்வினை வழங்க அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு சரிகை ஆலையில் உள்ள மூன்று தொழிலாளர் சங்கங்களுடன் ஊதிய உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு தொழிலாளர்களுக்கான நிலுவை ஊதியம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.1750/- ஊதிய உயர்வு மிகவும் குறைவு என தொழிலாளர்கள் கோரிக்கை எழுப்பியதால் அவர்களது கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் சரிகை உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப்பொருளான வெள்ளிப் பட்டிழையினையும், தங்கத்தையும் கொள்முதல் செய்து சரிகை உற்பத்தி செய்து வருகிறது. தமிழ்நாடு சரிகை ஆலை நிறுவனத்தில் அரசு பங்கு முதலீடு ரூ.34.40 இலட்சம் ஆகும். இந்நிறுவனம் ஈட்டிய இலாபத்தில் இதுநாள் வரையில் ரூ.180.37 இலட்சத்தினை ஈவுத்தொகையாக அரசுக்கு செலுத்தியுள்ளது.
சரிகையின் நிறம் மற்றும் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு, சூரத்திலிருந்து இரசாயனம் கொள்முதல் செய்யப்பட்டு தங்க முலாம் பூச்சு பிரிவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் CECRI காரைக்குடி பரிந்துரையின்படி கீழ்க்கண்ட மேம்பாடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1) தங்க முலாம் பூச்சு பிரிவில் பிளாட்டினம் கம்பிகளுக்கு பதில் துளையிடப்பட்ட துருப்பிடிக்காத இரும்பு தகடுகள் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
2) கச்சாப் பொருட்களான வெள்ளிப்பட்டிழை தரத்தை மேம்படுத்தும் விதமான நீள அளவினை கணக்கிடும் கருவி பொருத்தப்பட்டு தர அளவீடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
3) 240 கதிர்கள் கொண்ட அதிவேக நூற்பு இயந்திரம் கொள்முதல் செய்து நிறுவப்பட்டு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
4) ஆலையில் மேலும் இரண்டு பழைய தங்க முலாம் பூசும் இயந்திரங்களுக்குப் பதிலாக, இரண்டு புதிய செங்குத்து வகையிலான தங்க முலாம் பூசும் இயந்திரம் நிறுவுவதன் மூலம் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் சரிகையின் தரம், நிறம், பளபளப்பினை கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
5) சென்னை அண்ணா பல்கலைகழகத்திலுள்ள ஜவுளித் துறை மூலம் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் சரிகையின் தரம், நிறம், பளபளப்பினை கூட்ட திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
2022-23 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டம்
தமிழ்நாடு சரிகை நிறுவனம் மாதம் 4,000 சரிகை மார்க்குகள் உற்பத்தி செய்து, பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சரிகை தேவையினையும் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது சூரத்திலிருந்து கொள்முதல் செய்யும் இரசாயனங்களை ஆலையிலேயே தயாரிப்பதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆலை மற்றும் அலுவலக கட்டிடங்களை புதிப்பித்து ஆலையின் உள்கட்டமைப்பினை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.