ஜவுளித்தொழிலின் வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு, ஜவுளித்தொழிலில் உலகத்தரத்துடன் கூடிய உட்கட்டமைப்பு வசதிகளை ஒரே இடத்தில் ஏற்படுத்தும் வகையில் ’’ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டம்’’ என்ற திட்டத்தினை 2005-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் உலகத் தரத்துடன் கூடிய புதிய ஜவுளிப் பூங்காக்களை வளர்ச்சியடையக் கூடிய மையங்களில் அமைத்து வருகிறது.
இத்திட்டமானது பொது-தனியார் பங்களிப்பு முறையில் செயல்படுத்தப்படுகிறது. திட்டத் தொகையில் 40 விழுக்காடு அல்லது ரூ.40.00 கோடிக்கு மிகாமல் ஒன்றிய அரசு மானியமாக வழங்குகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு 9 விழுக்காடு அல்லது ரூ.9.00 கோடிக்கு மிகாமல் மானியம் வழங்கி வருகிறது.
நூற்பு, நெசவு (கைத்தறி மற்றும் விசைத்தறி) பதனிடுதல், பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை, வீட்டு உபயோகத்திற்கான ஜவுளிகள் மற்றும் ஜவுளி பொறியியல், உதிரி பாகங்களை உருவாக்குதல் மற்றும் கட்டுதல் உள்ளடக்கிய தொழில்நுட்ப ஜவுளிகள் போன்ற அனைத்து ஜவுளித்தொழிலின் துணை பிரிவுகளின் உற்பத்தி மற்றும் அதனைச் சார்ந்த செயல்களை ஜவுளி பூங்காக்கள் உள்ளடக்கி உள்ளது.
ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் 8 ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவற்றில் கீழ்க்கண்ட நான்கு பூங்காக்கள் முழுவதுமாக நிறுவப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
1) உயர்தொழில்நுட்ப நெசவுப் பூங்கா, பல்லடம், திருப்பூர்.
2) ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, கரூர்.
3) மதுரை ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, வாடிப்பட்டி, மதுரை.
4) உயர்தொழில்நுட்ப நெசவுப் பூங்கா, குமாரப்பாளையம், நாமக்கல்.
எஞ்சிய கீழ்க்கண்ட 4 ஜவுளி பூங்காக்கள் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
1) கில்ட் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, செங்கப்பள்ளி, திருப்பூர்.
2) சைமா பதனிடும் பூங்கா, கடலூர்.
3) காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்கா, காஞ்சிபுரம்.
4) பல்லவாடா தொழில்நுட்ப நெசவுப் பூங்கா, ஈரோடு.