தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களின் நலம் பேணும் "கோ-ஆப்டெக்ஸ்" என அனைவராலும் அறியப்பட்டுள்ள தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1935 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
. இந்நிறுவனம் முதன்மையான மாநில கூட்டுறவு சங்க அமைப்பாக நாடு முழுவதும் வியாபித்து தனித்துவத்துடன் கைத்தறித் துறைக்கு தன்னிகரற்ற பங்களிப்பை அளித்து வருகிறது.
கோ-ஆப்டெக்ஸ் முத்திரையில் இருக்கும் பல நிறங்களைக் கொண்ட வண்ணத்துப் பூச்சி கைத்தறி ஆடைகளின் தரம் மற்றும் நியாயமான வர்த்தகத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் நெசவு பாரம்பரியத்தினை பறைசாற்றும் விதமாக திறமையான நெசவாளர்களை அடித்தளமாகக் கொண்டு ஒப்பிட முடியாத அழகியலுடன் நெய்யப்படும் கைத்தறி துணிகளால் இது சாத்தியமாகி உள்ளது. இன்று கோ-ஆப்டெக்ஸ் நீண்ட பாரம்பரியம் கொண்ட கைத்தறி துணிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு நெசவாளர்களுக்கு நீடித்த வேலைவாய்ப்பு வழங்கும் சமூக நோக்கத்தோடும் செயல்பட்டு வருகிறது.
கோ-ஆப்டெக்ஸ் தன்னுடன் இணைக்கப்பட்டுள்ள 1057 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களாலும், 197 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களாலும், உற்பத்தி செய்யப்படுகின்ற துணிகளை நாடு முழுவதும் பரவலாக உள்ள தனது விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்து கைத்தறி சங்கங்களின் விற்பனை அபிவிருத்திக்கு பேருதவி புரிகிறது. இதனால் கூட்டுறவு நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு நெசவாளர்களின் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தும் உயர்ந்த நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கீழ்க்காணும் உயர் நோக்கங்களை செயல்படுத்தி வருகிறது.
1) கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.
2) நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு சந்தை ஆதரவிற்கு உறுதுணையாக இருந்து, கைத்தறி இரகங்களை பிரபலப்படுத்துதல்.
3) வாடிக்கையாளர்களின் மாறிவரும் இரசனைக்கேற்ப பாரம்பரியம் மற்றும் புதுமையுடன் கூடிய இரகங்களை உருவாக்குதல்.
4) பல்வேறு வகையிலான புதுமையான திட்டங்களைச் செயல்படுத்துதல்.
நாடு முழுவதும் செயல்படும் தனது
154 விற்பனை நிலையங்கள் மூலமாக பல்வேறு கைத்தறி இரகங்களை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை செய்து வருகிறது.
தனது செயல்பாட்டின் ஒரு பகுதியாக அரசு செயல்படுத்தும் திட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டு அரசு திட்டங்களை செயல்படுத்தி வரும் முகமை நிறுவனமாகவும் விளங்குகிறது.
கோ-ஆப்டெக்ஸ் செயல்படுத்தி வரும் அரசின் திட்டங்கள்:
1. முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன் பெறுவோர்க்கு வருவாய்த்துறையின் மூலம் வேட்டி சேலை வழங்கும் திட்டம். இத்திட்டத்திற்கு முகமை நிறுவனமாக கோ- ஆப்டெக்ஸ் செயல்படுகிறது.
2. வேட்டி சேலை வழங்கும் திட்டம்
3. விலையில்லா சீருடை வழங்கும் திட்டம்
விற்பனை விவரங்கள் மற்றும் செயல்பாடுகள்:
2021-2022 ல் சில்லரை விற்பனை
2021-22 ஆம் ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.171.90 கோடி மதிப்பிற்கு விற்பனை செய்துள்ளது. ஆண்டு முழுவதும் தொடர் கொள்முதல் செய்ததன் மூலமாகவும், 14 விற்பனை நிலையங்களை நவீனப்படுத்தியமையாலும், புதிய வடிவமைப்புகளுடன் கூடிய கைத்தறி துணிகளை அறிமுகப்படுத்தியதாலும் ( NIFT / NID வடிவமைப்பாளர்களை கொண்டு) சிறப்பு இரகங்களான சட்டைகள், வேட்டிகள், கைலிகள், ஆர்கானிக் இரகங்கள் மற்றும் ஏற்றுமதி இரகங்களுக்கான பிரத்யேக விற்பனை நிலையங்கள் தொடங்கியது, 11 மண்டலத்தில் உள்ள பணியாளர்களுக்கு வேலைப்பயிற்சி மற்றும் ஊக்குவித்தல் பயிற்சியின் மூலமாகவும் இந்த விற்பனையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் எய்தியுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமானது பெருமளவு இளம் வயது வாடிக்கையாளர்களுக்கு முகநூல் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி விளம்பரம் செய்ததன் மூலமாக அவர்கள் முதன்முறையாக கைத்தறி துணிகளை வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
மின் வணிகம் விற்பனை:
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வலைதளத்தின் மூலம் மின் வணிக விற்பனையை அறிமுகப்படுத்தி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிக அளவில் விற்பனையைப் பெருக்கி வருகின்றது. மின் வணிகம் துவங்கப்பட்ட 2014-15 ஆம் ஆண்டு முதல் மின் வணிக விற்பனை ஏற்றமிக்க வகையில் நடைபெற்று வருகிறது.
மின் வணிக விற்பனையின் மூலம்
ரூ.135.47 இலட்சத்திற்கு 2021-2022 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
2021-2022-ல் விற்பனை நிலையங்களை நவீனப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள்:
2021-22 ஆம் ஆண்டில் 14 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் நவீனமயாக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மண்டலத்தில் ராஜாஜி நகர், பசவன்குடி மற்றும் விஜயநகரம் விற்பனை நிலையங்கள், சென்னை மண்டலத்தில் தலைமைச் செயலகம் மற்றும் பட்டர்ஃபிளை, அஷ்டலஷ்மி, அண்ணா நகர், மைலாப்பூர் மற்றும் தாம்பரம் விற்பனை நிலையங்கள், தஞ்சாவூர் மண்டலத்தில் பொதிகை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை விற்பனை நிலையங்கள். கடலூர் மண்டலத்தில் பாண்டிச்சேரி விற்பனை நிலையம், மதுரை மண்டலத்தில் அங்கயற்கண்ணி விற்பனை நிலையம், வேலூர் மண்டலத்தில் திருவண்ணாமலை விற்பனை நிலையம் ஆகியவை ரூ.238.00 இலட்சம் மதிப்பில் நவீனப்படுத்தப்பட்டுள்ளன.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 5 சிறப்பு இரக வாரியான விற்பனை நிலையங்களை கோ-ஆப்டெக்ஸ் வணிக வளாகம், சென்னையில் தொடங்கியுள்ளது. இந்த விற்பனை நிலையங்கள் ரூ.98 இலட்சம் மதிப்பில் கோ-ஆப்டெக்ஸ் சட்டைகள், கோ-ஆப்டெக்ஸ் வேட்டிகள், கோ-ஆப்டெக்ஸ் கைலிகள், கோ-ஆப்டெக்ஸ் ஏற்றுமதி இரகங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஆர்கானிக் இரகங்கள் என்ற பெயரில் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் பசவன்குடி விற்பனை நிலையம், பெங்களூரு
கோ-ஆப்டெக்ஸ் ராஜாஜி நகர் விற்பனை நிலையம், பெங்களூரு
கோ-ஆப்டெக்ஸ், விஜயநகர்
விற்பனை நிலையம், பெங்களூரு
கோ-ஆப்டெக்ஸ் தலைமைச் செயலகம் விற்பனை நிலையம், சென்னை
கோ-ஆப்டெக்ஸ் பட்டர்ஃபிளை
விற்பனை நிலையம், சென்னை
கோ-ஆப்டெக்ஸ் ஏற்றுமதி
ரகங்கள் விற்பனை நிலையம், சென்னை
கோ-ஆப்டெக்ஸ் வேட்டிகள், கைலிகள் மற்றும் ஆர்கானிக் இரகங்கள் விற்பனை நிலையம், சென்னை
கோ-ஆப்டெக்ஸ் பிரத்யேகமான பருத்தி மற்றும் லினன் சட்டை விற்பனை நிலையம், சென்னை
வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் செயல்படுத்திவரும் விற்பனை முன்னேற்ற திட்டங்கள்:
கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்புத் திட்டம்
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பிரபலமான மாதாந்திர சேமிப்புத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்சம் ரூ.300/- முதல் மாதத் தவணையாக செலுத்தலாம். வாடிக்கையாளர்கள் 10 தவணைகள் செலுத்திய பிறகு 11வது மற்றும் 12வது தவணை தொகை கோ-ஆப்டெக்ஸால் ஊக்கத் தொகையாக செலுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம்
ரூ.12.77 கோடி மதிப்பிற்கு 2021-22 ஆம் ஆண்டில் விற்பனை நடைபெற்றுள்ளது.
பட்டுத் திருவிழா
பட்டுச் சேலைகள் விற்பனையை அதிகரிப்பதன் மூலம் கோ-ஆப்டெக்ஸின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு கோ-ஆப்டெக்ஸ் "பட்டுத் திருவிழா" சென்னை தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை மற்றும் சேலம் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையங்களில் மார்ச் 2022-ல் நடைபெற்றது. இதன் மூலம் ரூ.2.10 கோடி மதிப்பிலான துணிகள் விற்பனை செய்யப்பட்டன.
கோ-ஆப்டெக்ஸ் இன்டர்நேஷனல்:
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமானது, கைத்தறி இரகங்களை ஏற்றுமதி செய்யும் பொருட்டு 1975 ஆம் ஆண்டு “கோ-ஆப்டெக்ஸ் இண்டர்நேஷனல்” எனும் தனிப்பிரிவை உருவாக்கி. சென்னிமலை பகுதி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி இரகங்களை, ஜெர்மனி, பெல்ஜியம், ஸ்பெயின், இத்தாலி. பிரான்சு, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
கைத்தறி வீட்டு உபயோக இரகங்களான போர்வைகள், மேஜை விரிப்புகள், சமையலறை துணி வகைகள், நாகரீக பைகள் முதலியவற்றிற்கு ரூ.104.00 இலட்சம் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்ய 2021-22 ஆம் ஆண்டில் பணி ஆணைகள் பெறப்பட்டுள்ளது.
கண்காட்சிகளில் பங்கேற்பு:
கைத்தறி பொருட்களை சர்வதேச சந்தைகளில் பிரபலப்படுத்துவதற்காக 2021-2022 ஆம் ஆண்டில் கீழ்காணும் நேரடி மற்றும் மெய்நிகர் கண்காட்சிகளில் கோ-ஆப்டெஸ் இண்டர்நேஷனல் பங்கேற்றது.
மெய்நிகர் கண்காட்சிகளில் பங்கேற்ற பட்டியல்
வ.
எண்
|
நிகழ்ச்சிகள் விபரம்
|
கலந்து கொண்ட காலம்
|
1
|
இந்திய கைத்தறி இரகங்கள் மற்றும் வீட்டு உபயோக இரகங்களுக்கான கண்காட்சி – ஜப்பான்
|
08.02.2022 முதல் 10.02.2022 வரை
|
2
|
இந்திய கைத்தறி இரகங்கள் மற்றும் வீட்டு உபயோக இரகங்களுக்கான கண்காட்சி –ஜெர்மனி மற்றும் பெல்ஜியம்
|
14.02.2022 முதல் 16.02.2022 வரை
|
3
|
இந்திய கைத்தறி இரகங்கள் மற்றும் வீட்டு உபயோக இரகங்களுக்கான கண்காட்சி –
சுவீடன் மற்றும் டென்மார்க்
|
02.03.2022 முதல் 04.03.2022 வரை
|
4
|
இந்திய கைத்தறி இரகங்கள் மற்றும் வீட்டு உபயோக இரகங்களுக்கான கண்காட்சி –அமெரிக்கா
|
08.03.2022 முதல் 10.03.2022 வரை
|
5
|
இந்திய கைத்தறி இரகங்கள் மற்றும் வீட்டு உபயோக இரகங்களுக்கான கண்காட்சி - இங்கிலாந்து
|
15.03.2022 முதல் 17.03.2022 வரை
|
நேரிடையாக கண்காட்சிகளில் பங்கேற்பு
வ.
எண்
|
நிகழ்ச்சி
|
கலந்து கொண்ட காலம்
|
1
|
சர்வதேச கண்காட்சி – துபாய் 2020
|
25.03.2022 முதல் 31.03.2022 வரை
|
தூய ஜரிகை பட்டுசேலைகளில் உள்ள ஜரிகையின் தரம் உறுதிபடுத்துவதற்காக "ஜரிகை உத்திரவாத அட்டை" கோ-ஆப்டெக்ஸில் அறிமுகம்.
நம் நாட்டிலேயே முதன் முறையாக “ஜரிகை உத்தரவாத அட்டை” யை அறிமுகப்படுத்தி, காஞ்சிபுரம் சுத்த ஜரிகை பட்டு சேலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள ஜரிகையில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியின் அளவு சதவீதமானது, அரசு நிர்ணயித்துள்ள தர அளவீடுகளின் படி உள்ளது என்பதை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஜரிகை உத்திரவாத அட்டையானது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தால் இணைக்கப்பட்டு வருகிறது.
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் காஞ்சிபுரம் சுத்த பட்டு சேலைகளில் உள்ள ஜரிகையின் தரம் பரிசோதிக்கப்பட்டு, ஜரிகை உத்தரவாத அட்டை இணைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
"தமிழ் தறி" தொகுப்பு:
வாடிக்கையாளர்களை பெருமளவில் கவரும் பொருட்டு, “தமிழ்தறி” எனும் தொகுப்பின் கீழ் பட்டு பாவாடை மற்றும் சட்டை, இயற்கை பருத்தியிலான குழந்தைகளுக்கான ஆடைகள், புதியதாக வடிவமைக்கப்பட்ட பட்டு மற்றும் பருத்தி சேலைகள் ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
"ஜரிகை உத்திரவாத அட்டை" மற்றும் “தமிழ்தறி” தொகுப்பு இரகங்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 23.10.2021 அன்று அறிமுகம் செய்யப்பட்டது.
அரசு திட்டங்களின் செயல்பாடுகள்:
வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டம் பொங்கல் – 2022
பொங்கல் 2022 வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தில கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ஒரு முகமை நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின்கீழ் 80.20 இலட்சம் எண்ணிக்கையிலான சேலைகள் 79.47 இலட்சம் எண்ணிக்கையிலான வேட்டிகள் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டன.
விலையில்லா பள்ளிச் சீருடைத் துணி விநியோகம்
பள்ளி சிறார்களுக்கு, இலவச சீருடைத் துணி வழங்கும் திட்டத்தின் கீழ் முகமை நிறுவனங்களில் ஒன்றாக கோ-ஆப்டெக்ஸ் செயல்பட்டு வருகிறது. டிரில் இரகங்கள் 25.16 இலட்சம் மீட்டர், கேஸ்மென்ட் துணி ரகம் 93.50 இலட்சம் மீட்டர் மற்றும் சட்டை துணி 0.99 இலட்சம் மீட்டர் சமூக நலத் துறைக்கு 2021-2022 ஆண்டில் விநியோகம் செய்யப்பட்டன.
முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வேட்டி சேலைகள் வழங்கும் திட்டம்
முதியோர் ஓய்வூதிய திட்ட பயணாளிகளுக்கு இலவசவேட்டி சேலை வழங்கும் திட்டம் தீபாவளி 2021 மற்றும் பொங்கல் 2022-ன் பணிகளுக்கான முகமை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் செயல்பட்டு வருகிறது. தீபாவளி 2021-க்கு 23.70 இலட்சம் சேலைகளும், 9.25 இலட்சம் வேட்டிகளும் பொங்கல் 2022-க்கு 23.50 இலட்சம் சேலைகளும், 9.03 இலட்சம் வேட்டிகளும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
2022-23 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டம்:
விற்பனை இலக்கு
புதிய வடிவமைப்புகளை உருவாக்குதல், புதிய இரகங்களை அறிமுகம் செய்தல். விற்பனை நிலையங்களை நவீனப்படுத்துதல் மற்றும் விளம்பரங்கள் ஆகிய நடவடிக்கைகள் மூலம் 2022-2023 ஆம் ஆண்டிற்கு ரூ.300 கோடி விற்பனை இலக்கை அடைய கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதிய முயற்சிகள்
கோ-ஆப்டெக்ஸ் அதிகப்படியான வாடிக்கையாளரை குறிப்பாக இளம் வயதினரை கவர்ந்து விற்பனையை விரிவுபடுத்தும் நோக்கில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி சேலைகள், துப்பட்டாக்கள் மற்றும் பிற துணி இரகங்களையும் மற்றும் காதி மற்றும் கைவினைப் பொருட்களையும் விற்பனைப்படுத்த பெருநகரங்களில் தனித்துவமான விற்பனை நிலையங்கள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.