4.1 சிறந்த ஏற்றுமதியாளர்கள் விருது
கைத்தறி துணிகளின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும், அயல்நாட்டு சந்தையில் கைத்தறி துணி விற்பனையினை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு சிறந்த கைத்தறி துணி ஏற்றுமதியாளர்களுக்கு விருது வழங்கும் திட்டத்தினை 1975-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்க ஏதுவாக ஆண்டொன்றுக்கு ரூ.1.00 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால் 23.10.2021 அன்று தலைமைச் செயலகத்தில், 2020-21 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஏற்றுமதியாளர் விருது (முதல் பரிசு) M/s அம்பாடி எண்டர்பிரைஸ் லிமிடெட், சென்னை என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு. பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 23.10.2021 அன்று 2020-2021-ஆம் ஆண்டில் கைத்தறி இரகங்கள் ஏற்றுமதியில் பெருவாரியாக பங்கு வகித்த மூன்று சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
2022-2023-ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் ரூ.1.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
4.2 திறன்மிகு நெசவாளர்கள் விருது
பருத்தி மற்றும் பட்டு சேலை இரகங்கள், வேட்டி இரகங்கள், புதிய மற்றும் நவீன வடிவமைப்புகளை கொண்ட ஏற்றுமதி கைத்தறி இரகங்கள் என 20 இரகங்களை உற்பத்தி செய்யும் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் திறன்மிகு நெசவாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
திறன்மிகு நெசவாளர் விருதிற்கான விண்ணப்பங்கள் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் கோரப்படுகிறது. சங்கங்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் முதற்கட்டமாக சரக அளவிலான குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட கோரிக்கைகள் மட்டும் கைத்தறி ஆணையர் அவர்களின் தலைமையில் மத்திய பட்டு வாரியம், நெசவாளர் சேவை மையம், கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி கழகம் மற்றும் தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதிநிதிகள் கொண்ட மாநில அளவிலான குழுவின் பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இரகங்களின் காட்சி தோற்றம், வண்ணக்கலவை, வடிவமைப்பு தனித்துவம், நெசவில் கூடுதல் வேலைப்பாடு மற்றும் இரகத்தின் சிறப்பு அம்சங்களின் அடிப்படையில் திறன்மிகு நெசவாளர் விருது பெறுவதற்கான இரகங்கள் மாநில அளவிலான குழுவினரால் தெரிவு செய்யப்படுகிறது.
திறன்மிகு நெசவாளர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுத் தொகை என
60 விருதுகள் பின்வருமாறு வழங்கப்பட்டு வருகிறது.
முதல் பரிசு
|
ரூ.10,000/-
|
இரண்டாம் பரிசு
|
ரூ.6,000/-
|
மூன்றாம் பரிசு
|
ரூ.4,000/-
|
இத்திட்டத்திற்கான செலவினம் ரூ.4.00 இலட்சம், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது.
இத்திட்டம், 2022-23 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
4.3 மாநில அளவிலான சிறந்த நெசவாளர்கள் மற்றும் சிறந்த வடிவமைப்பாளர்கள் விருது
புதுமையான மற்றும் கண்கவர் வடிவமைப்புகளை புகுத்துதல் மற்றும் தற்போதைய சந்தையில் அதிக தேவையுள்ள பட்டு மற்றும் பருத்தி கைத்தறி இரகங்களை உற்பத்தி செய்து, கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்க அரசு "சிறந்த நெசவாளர் விருது" வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.
இதேப் போன்று, பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் நவீன
மற்றும் சந்தைப்படுத்த ஏதுவான சிறந்த
வடிவமைப்புகளை உருவாக்கும் வடிவமைப்பாளர்களுக்கு "சிறந்த வடிவமைப்பாளர் விருது" வழங்கப்படுகிறது.
"சிறந்த நெசவாளர் விருதிற்கான" விண்ணப்பங்கள் தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் கோரப்படுகிறது. சங்கங்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் முதற்கட்டமாக சரக அளவிலான குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட கோரிக்கைகள் மட்டும் கைத்தறி ஆணையர் அவர்களின் தலைமையில் மத்திய பட்டு வாரியம், நெசவாளர் சேவை மையம், கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி கழகம் மற்றும் தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதிநிதிகள் கொண்ட மாநில அளவிலான குழுவின் பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இரகங்களின் காட்சி தோற்றம், வண்ணக்கலவை, வடிவமைப்பு தனித்துவம், நெசவில் கூடுதல் வேலைப்பாடு மற்றும் இரகத்தின் சிறப்பு அம்சங்கள் ஆகிய 5 காரணிகளுக்கும் மாநில அளவிலான குழுவினரால் தலா 10 மதிப்பெண் வீதம் மதிப்பெண் வழங்கப்படுகிறது. அதிக மதிப்பெண் பெறும் இரகங்கள் சிறந்த நெசவாளர் விருது பெறுவதற்கு தெரிவு செய்யப்படுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 23.10.2021 அன்று 2020-2021-ஆம் ஆண்டின் பருத்தி மற்றும் பட்டு இரகங்களுக்கான சிறந்த நெசவாளர் விருதின் முதல் பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசுக்கான சான்றிதழ்கள் மற்றும் ரூ.4.50 இலட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும், 2020-2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த வடிவமைப்பாளர் விருது மூன்று வடிவமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2020-2021 ஆம் ஆண்டுக்கு வழங்கப்பட்டுள்ள சிறந்த நெசவாளர் விருது மற்றும் சிறந்த வடிவமைப்பாளர் விருதுகளின் விவரம் பின்வருமாறு:
மேற்கண்ட இப்பரிசுத் தொகை 2021-2022 ஆம் ஆண்டு முதல் பின்வருமாறு உயர்த்தி வழங்க அரசாணை எண்.110, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை, நாள் 21.10.2021-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம், 2022-2023 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
4.4 டாக்டர் எம்.ஜி.ஆர் கைத்தறி நெசவாளர் நல்வாழ்வு அறக்கட்டளையின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்குதல்
நெசவாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, டாக்டர் எம்.ஜி.ஆர். கைத்தறி நெசவாளர் நல்வாழ்வு அறக்கட்டளை 1986-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் ஐந்து இடங்களைப் பெறும் ஐந்து மாணவர்கள் மற்றும் ஐந்து மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் ஐந்து நிலை பெறும் ஐந்து மாணவர்கள் மற்றும் ஐந்து மாணவியர்களுக்கு 40 பாடப்பிரிவுகளில் தங்கள் மேல்படிப்பை முடிக்கும் காலம் வரையில் ஆண்டொன்றுக்கு ரூ.1,000/- முதல் ரூ.7,500/- வரை கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், ஒவ்வொரு ஆண்டும் மொத்தம்
400 மாணாக்கர்கள் (200 மாணவர்கள் மற்றும்
200 மாணவியர்கள்) கல்வி உதவித் தொகை பெறுகின்றனர்.
இத்திட்டம் 2022-23 ஆம் ஆண்டிலும் தொடரப்படும்.
4.5 தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்
தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெறும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் 2008 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை விவரங்கள் பின்வருமாறு,
4.6 இந்திய கைத்தறி தொழில்நுட்ப பயிலகத்தில் பயிலும் மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்
கைத்தறி நெசவாளர்களின் வாரிசுகளை ஊக்குவிக்கும் விதமாக, சேலத்தில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்ப பயிலகத்தில் மூன்று ஆண்டு பட்டயப் படிப்பான கைத்தறி மற்றும் துணிநூல் தொழில்நுட்ப கல்வி பயில, மாணாக்கர்கள் தேர்வு செய்யப்படும் போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதோடு, அவர்களுக்கான கல்வி உதவி தொகை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
2021-2022 ஆம் ஆண்டு முதல் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகை ஒன்றிய அரசால் உயர்த்தப்பட்டு, தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசால் பின்வரும் விகிதத்தில் உயர்த்தப்பட்ட கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மேற்படி கல்வி உதவித் தொகையுடன் புத்தகங்கள் வாங்குவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் எதிர்பாராச் செலவினமாக ஆண்டொன்றுக்கு கூடுதலாக ரூ.1,000/- வழங்கப்படுகிறது. இது தவிர, இரண்டாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு கல்விச் சுற்றுலாப் படியாக ஆண்டொன்றுக்கு ரூ.1,000/-மும், மூன்றாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்களுக்கு திட்டப் பணிகளுக்கான உதவித் தொகை ரூ.500/-மும் வழங்கப்பட்டு வருகிறது. இக்கல்வி உதவித் தொகை தமிழக அரசால் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவு கல்வி நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்திலுள்ள கடாக், ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள வெங்கடகிரி மற்றும் கேரள மாநிலத்திலுள்ள கண்ணூர் ஆகிய இடங்களிலுள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்ப பயிலகத்தில் தமிழக அரசு இட ஒதுக்கீட்டில் பயின்று வரும் மாணவ/மாணவியருக்கும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கல்வி நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ், 2021-2022 ஆம் ஆண்டில்
87 மாணாக்கர்கள் பயன்பெற்றுள்ளனர்.